மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டு சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான திரௌபதி அம்மன் சிலை நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூரில் 500 ஆண்டுகளுக்கு பழமையான திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூசாரியாக நாராயணன் என்பவரும் அவருக்கு உதவியாளராக கந்தசாமி என்பவரும் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
நாராயணனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோவிலில் இருந்த பழமையான திரௌபதி அம்மன் சிலையை மற்றும் நகைகளை கந்தசாமி எடுத்துச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து 1915 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் திருடுபோன சிலைகள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் கந்தசாமியின் வீட்டின் சுவற்றில் திரௌபதி அம்மன் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கிடைக்க இந்த தகவலை சிலை கடத்தல் பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேலிடம் தெரிவித்துள்ளனர்.
அவரது உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று சிலை இருப்பதாக கூறப்பட்ட வீட்டின் குறிப்பிட்ட இடத்தை துளையிட்டனர். அப்போது சுவற்றுக்குள் 2 அடி உயர திரௌபதி அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. உலோகத்தாலான அந்த சிலை சுமார் 700 ஆண்டுகளுக்கு பழமையானது எனக் கூறப்படுகிறது.
சிலை மட்டுமே இருந்தது நகைகள் இல்லை. சிலையை மீட்ட காவல்துறையினர் நகைகளை தேடி வருகின்றனர். அந்த வீடு கந்தசாமி குடும்பத்தில் இருந்து இரண்டு முறை கைமாறி தற்போது வேறு நபரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.