அமைச்சர் கே. என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்ட 12 பேர் 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே .என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சாமி ரவி, திலீப் சிவா, சத்யராஜ், ராஜ்குமார், தென்கோவன் என்கிற சண்முகம் உள்ளிட்ட 13 ரவுடிகளிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
இதனைத் தொடர்ந்து தென்கோவன் என்கிற சண்முகம் தவிர மற்ற 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி சிவக்குமார் சம்மதம் தெரிவித்த 12 பேரும் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்றிதழ் உடன் இன்று அதாவது 21ஆம் தேதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து 12 பேரும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 10 பேர் நேரில் ஆஜரானார்கள். மீதம் உள்ள சுரேந்தர், சத்யராஜ் ஆகிய இருவர் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்.6-ல் மருத்துவ அறிக்கையுடன் ஆஜராகி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னை அல்லது பெங்களூரில் உள்ள பரிசோதனை மையத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.