காஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கம் பகுதி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மகன் பெயிண்ட் வேலை செய்யும் அஜித் குமார் (23), இவர் கடந்த 12.07.2020 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழ்வெண்பாக்கம் பகுதியில் நண்பருடன் மது அருந்திக்கொண்டிருந்த போது முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நெமிலி காவல் துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் வத்தியூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (24), சந்தானம் (24), சர்மாமூர்த்தி (20), சிவா (23), அஜித்குமார், ராஜசேகர் (23), பரசுராமன் (26) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கொலை வழக்கில் கைதான 7 பேர் மற்றும் கொலை செய்யப்பட்ட அஜீத்குமாரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களோடு இன்னும் சிலரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளார்கள். இவர்கள் திருட்டு, கூலிக்குக் கொலை செய்வது போன்ற வேலைகளை ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த கும்பலுக்கும் மற்றொரு கும்பலுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார் கேங்க்கை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்துள்ளார்கள். அதற்குப் பழிவாங்க அஜித்குமார் நண்பர்கள் முடிவு செய்தபோது அதற்கு அஜித் தடையாக இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அஜித்குமாரிடம் பேசி தனியாக அழைத்து வந்து மது அருந்தவைத்து கொலை வெட்டி படுகொலை செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாண்டியன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் பட்டியலின இளைஞர் அஜித்குமாரை கொலை செய்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (24), சந்தானம் (24), சர்மாமூர்த்தி (20), சிவா (23), அஜித்குமார், ராஜசேகர் (23), பரசுராமன் (26) உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ஐந்தாயிரம் அபராதமும், அபராத தொகையைக் கட்டத்தவறினால் 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். இதனையடுத்து 7 பேரும் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.