Skip to main content

செங்கோட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. 

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள செங்கோட்டையில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கடைகள் உடைக்கப்பட்டு கலவரம் ஏற்பட்டது.இதையடுத்து இந்த ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், எஸ்.பி.அருண்சக்திகுமார் ஆகியோரின் நேர்கண்காணிப்பில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 

நகர் முழுவதும் 30 கண்காணிப்பு கேமராக்கள் இரண்டு ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமராக்கள் இயக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் தென்காசி கோட்டாட்சியர் பழனிசாமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊர்வலத்தை அமைதியாக நடக்க ஏற்பாடுகளை செய்தனர். இதன்படி காலை 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்குள் ஊர்வலம் நடத்தப்பட்டு சிலைகள் விஜர்சனம் செய்யப்பட வேண்டும் என்று முடிவானது.

ஊர்வலத்தை நடத்தி முடிக்க இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு துவங்கிய ஊர்வலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி கரைக்கப்பட்டன. செங்கோட்டை நகரில் மட்டும் 34 சிலைகள் இவ்வாறு விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடத்தி முடித்ததில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையின் பங்கு பாராட்டுக்குரியது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்