தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான பெரிய நகைக் கடைகளுக்குத் தேவையான தங்க நகைகளை, சேலத்தைச் சேர்ந்த தனியார் ஏஜென்சிகள் மூலம் ஒவ்வொரு கடைகளுக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதேபோல் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலும் உள்ள பிரபலமான நகைக் கடைகளுக்கு கொடுப்பதற்காக சேலம் ஏஜென்சி கொண்டு வந்த ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைப் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் கந்தர்வகோட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் இன்று (25.03.2021) புதுக்கோட்டை அறந்தாங்கி - பேராவூரணி சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்நேரம் அந்த வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து வந்த ஒரு டெம்போ டிராவலரை சோதனை செய்தனர். அப்போது சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமையில் காரைக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான நகைக் கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்லபட்டன. அனைத்தும் 11 பார்சல்களாக கட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த, 6.843 கிலோ எடையுள்ள ரூ.3.17 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் ஆகும். எந்தவித ஆவணங்களும் இல்லாததால் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்ட நகைகள், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதேபோல் தொடர்ந்து பிரபலமான நகைக் கடைகளுக்கு கொண்டு செல்லும் நகைகள் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.