7 தமிழர்கள் விடுதலை குறித்த வழக்கில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இச்சிக்கலில் ஜெயலலிதாவின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறுவதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களின் தமிழகத் தரகர்களாக அ.தி.மு.க. அரசு மாறி வருகிறது என்பதையே காட்டுகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால் அதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை வழக்கை விரைவுபடுத்தி சாதகமான தீர்ப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.