புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பழனிவேல் தலைமை வகித்தார். தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் எஸ்.குமரவேல், பள்ளி ஆசிரியர்கள் க.ஆண்டிவேல், க.அனந்தநாயகி, சி.பாத்திமா, த.அருந்தேவி, மதிவாணன், சரவணன் ஆகியோர் தமிழர்களின் தொன்மை வரலாறு குறித்தும் அதனைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினர்.
தலைமையேற்று பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல், பழமையான தமிழி எழுத்துக்களை எழுதியும் வாசித்தும் காட்டிய மாணவர்களைப் பாராட்டினார். வருங்காலத்தில் உயர் பணிகளுக்குச் செல்வதற்கு இந்தப் பயிற்சி மிகுந்த பயனாய் அமையும் என்றார். அனைவரும் அறிந்திராத தமிழி எழுத்துக்களை மாணவர்கள் எழுதி வாசிப்பதற்குப் பயிற்சியளித்த தொன்மை பாதுகாப்பு மன்றத்திற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
உலக மரபு வார விழா குறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் பேசியதாவது, "உலகம் முழுவதும் உள்ள பல்வேறுபட்ட மனித வர்க்க பரவலில் தனிப்பட்ட வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள், அடையாளங்கள், மொழி , கலை வடிவங்கள், உணவு முறைகள், வாழ்விடங்கள் என வேறுபாடுகள் இருப்பதையும் அவற்றை அழியாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே உலக மரபு வார விழாவின் தலையாய நோக்கமாகும். இப்பணியை இளைய சமூகத்தினருக்குக் கடத்தும் நோக்கத்துடனேயே இதுபோன்ற பயிற்சிகள் , விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
நமது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழி மற்றும் முற்கால தமிழ் எழுத்து வடிவங்களை அறிமுகம் செய்து வாசிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சியின் நிறைவில் அனைவரும் கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்க இயலும்" என்றார். இறுதியாகத் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர் முகமது ஆசிப் நன்றி கூறினார்.