வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 520 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வட தமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.