அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த விவகாரத்தில் நடுக்கடலில் மீனவர்களுக்குள் ஏற்பட்டமோதல் கடலோர மாவட்டங்களையை பரபரப்பாக்கியது, " இனிவரும் காலங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தமாட்டோம், அதற்கு ஒன்றுகூடி முடிவு கட்டுவோம்," என மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மீனவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது சிறு,குறு மீனவர்களை மனமகிழவைத்திருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கடற்பகுதியில் நாகப்பட்டினத்தில் உள்ள கீச்சாங்குப்பம் மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர், இதனை அறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் சிலர் தங்களின் பைபர் படகில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் இருதரப்புக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டு இருதரப்பு மீனவர்களிலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என நாகை மாவட்டம் ஆட்சியர் பிரவின்நாயரிடம் புகார் மனு அளித்தனர். பிரச்சனையின் வீரியத்தை உனர்ந்த மாவட்ட ஆட்சியர், நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்கிராமங்கள் முழுவதுமுள்ள தடை செய்யவும், வலைகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து மீன்வளத் துறை அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் நாகை துறைமுகத்திற்கு சென்று அங்கே குவியலாக இருந்த சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முனைந்தனர்.
இதையறிந்த கீச்சாங்குப்பம் மீனவர்களும், மீனவப்பெண்களும் போலீசாரை தடுத்து நிறுத்தினர், அதோடு மீனவ பெண்கள் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு, ஒரு அடி இனி எடுத்துவைத்தாலோ, வலைகளில் கையவைத்தாலோ கொளுத்திக்கொள்வோம் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை துறைமுகமே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பதட்டமும்,பரபரப்பும் நீடித்தது.பிறகு மீனவ கிராம பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தாமல் இருப்பது, குறித்து ஒரு வாரத்திற்குள் நாகை காரைக்கால் மாவட்ட 64 கிராம மீனவர்களின் கூட்டத்தில் கூடி முடிவு எடுக்கிறோம்," என்று அதிகாரிகளிடம் மீனவ பஞ்சாயத்தார்கள் உறுதி அளித்தனர்.