கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நீர் திறந்துவைத்த நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்கான திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.09 கோடியிலான குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை நெல் சாகுபடிக்கான இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கு ரசாயன உரங்கள் ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்படும். நெல் விதைகள், உரங்கள், இடுபொருட்களின் மானியத்திற்கு ரூபாய் 50 கோடியும், வேளாண் இயந்திரங்கள் மானியத்திற்கு ரூபாய் 11.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.5 லட்சம் ஏக்கர் என்ற இலக்கைவிட அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இந்தக் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் மூலம் 2,07,259 விவசாயிகள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.