தமிழகத்தில் உள்ள வனப்பரப்பை 28 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் முயற்சித்து வருகிறார். இதில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இந்த பசுமைப்புரட்சி திட்டத்தின் முதற்கட்டப் பணியைத் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 117 ஏக்கரில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கு முன் இங்கிருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 16,500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை முதல் நடந்த இந்த நிகழ்ச்சியில் 4 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. வேம்பு, பூவரசம் போன்ற 43 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தமிழக ஊரகத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். உலக சாதனைக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிற்கு கொடுக்கப்பட்டன.