ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்கிற முறை தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வியில் அதிகமாக கவனம் செலுத்தாமல் திசை திரும்புவதாகவும், மாணவர்கள் கல்வி தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியது.
அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்த முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்த அந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அதில், “தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கல்வி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மேலும், “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும். மொழித் தாள்களுக்கான ஒரே தேர்வு நடைமுறை நிகழ் கல்வி ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.