சேலம் - சென்னை ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான மொஹர்சிங் உள்ளிட்ட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
2016 ஆம் ஆண்டு சென்னை சேலம் ரயிலில் நடைபெற்ற 5.78 கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் ஏற்கனவே தினேஷ், ரோகன் ஆகிய இரண்டு பேர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் வேறு ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
மொஹர் சிங்,காளியா,மகேஷ்,பிலித்தியா,ருசி ஆகிய 5 பேருக்கு, இந்த கொள்ளை சம்பவத்திலும் தொடர்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கு துப்பு துலங்கியதன் அடிப்படையில் மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை டிரான்சிட் வாரண்ட் மூலம் அங்கிருந்து சென்னை அழைத்து வந்துள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அவர்களை சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு 5 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் நவம்பர் 12 வரை போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.