கஞ்சா வியாபாரிகளின் 5.5 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்குத் தமிழக டிஜிபி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க 'ஆபரேசன் கஞ்சா 2.0' என்ற அந்த திட்டம் தொடங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காளை மற்றும் அவரது உறவினர் பெருமாயி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்துள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளதோடு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.