
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அவர்களது வாதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக வாதிட்டனர்.
கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. இடஒதுக்கீடு வழங்காததால் 2700-க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. தமிழக மாணவர்கள் இடம் பறிபோயின. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை, மத்திய அரசு திருடிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் வாதத்தை முன்வைத்தனர். ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.