சேலத்தில், ஜவுளி நூல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பாக, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
சேலம் மறவனேரி சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (66). ஜவுளி நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (62). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அம்மாபேட்டையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இதையடுத்து திருநாவுக்கரசும் அவருடைய மனைவியும் மட்டும் மறவனேரியில் தனியாக வசித்து வருகின்றனர். மே 31 ஆம் தேதி மாலை தனது இளைய மகன் பிரவீன்குமாரின் மனைவியுடைய தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சூரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு தம்பதியினர் சென்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அணிந்து சென்ற நகைகளை, மல்லிகா கழற்றி நகைப்பெட்டியில் போட்டு, அதை டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில், வீட்டிற்குள் பொருள்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட கணவன், மனைவி இருவரும் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்திருந்த நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கத்திக் கூச்சல் போட்டனர்.
இதுகுறித்து தங்கள் மகன்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர்கள் சரவணகுமார், அசோகன், காவல் ஆய்வாளர் பால்ராஜ், காவலர்கள் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். மல்லிகா, நகைப் பெட்டிக்குள் வைத்த 50 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பி கதவு, மரக்கதவு ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து அறைக்குள் நுழைந்துள்ளனர். படுக்கை அறையின் டிரஸ்ஸிங் மேஜை மீது நகைப்பெட்டிக்குள் நகைகள் அனைத்தும் இருந்தது அவர்களுக்கு வசதியாக போய்விடவே, அதை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அதேநேரம், பீரோவுக்குள் வைத்திருந்த நகைகள் அப்படியே பாதுகாப்பாக இருந்தது. தம்பதியை பார்த்ததும் மர்ம கும்பல் கைக்குக் கிடைத்த நகைப்பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று மாலையில் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால், இரவிலும் யாரும் வர மாட்டார்கள் என மர்ம நபர்கள் கருதி, வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக தம்பதியினர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எழுந்து வந்துவிட்டதையும் பார்த்ததால் திருடர்கள் கையில் கிடைத்த நகைப்பெட்டியுடன் தப்பியிருக்கலாம் எனவும் காவல்துறை கருதுகிறது. தடயவியல் நிபுணர்கள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த வீட்டுக்கு எதிரில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் அருகில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் அந்த வீட்டுக்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.