தென்காசி மாவட்டத்தில் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் கரிவலம் அருகேயுள்ள ஒப்பனையாள்புரத்தைச் சேர்ந்த குருசாமி, அவரது மனைவி வேலுத்தாய் உள்ளிட்ட உறவினர்களுடன் காரில் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அவர்களின் மகன் மனோஜ் குமாருக்கு மொட்டை போட்டு பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாலையில் அவர்களின் கார் பனவடலிசத்திரம் பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஊத்துமலையைச் சேர்ந்த தங்கம் என்பவர் பள்ளி வேன் ஒன்றின் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர் மீது மோதாமலிருக்கவேண்டி வேன் டிரைவர் வேனை வலது புறமாகத் திருப்ப, அதுசமயம் சங்கரன்கோவில் கோவில் நோக்கி வந்துகொண்டிருந்த அந்தக் காரும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி, வேலுத்தாய், மனோஜ்குமார், உடையம்மாள், டிரைவர் அய்யனார் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆனால் தனியார் பள்ளி வேனில் வந்த தேவர்குளம் பகுதியின் மாணவிகள் நான்கு பேர் மட்டும் லேசான காயமடைந்தனர். சம்பவ இடம் வந்த பனவடலிசத்திரம் போலீசார் உடல்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன், கோட்டாட்சித் தலைவர் சுப்புலட்சமி ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.