Skip to main content

5 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்!; சேலத்தில் டாக்டர் திருமால் பாபு பொறுப்பேற்கிறார்!!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

தமி-ழகத்தில் ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக, வேலூர் அரசு மருத்துவமனை இருதயவியல் துறைத்தலைவர் கே.திருமால் பாபு விரைவில் பொறுப்பேற்கிறார்.


தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் (டீன்) பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து அந்த இடங்களில் மூத்த பேராசிரியர்கள்  பொறுப்பு முதல்வராக பணியாற்றி வருகின்றனர். முதல்வர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 11 பேர், முதல்வர் பதவி உயர்வுக்குரிய பட்டியலில் இடம் பெற்றனர். 

 

selam

 

அவர்களில் காலியிடங்கள் மற்றும் மூப்பு அடிப்படையில் ஐந்து மருத்துவர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (செப்டம்பர் 12, 2018) மாலை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு பணியிடம் ஒதுக்கியும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறைத்தலைவராக பணியாற்றி வரும் மருத்துவர் கே.திருமால் பாபு, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக உள்ள குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் கே.ராஜேந்திரன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் பி.வசந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். கோயம்பத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.


சேலம் முதல்வரை பற்றி...


சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால், சில நாள்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தார். இதையடுத்து, மூத்த மருத்துவரான பிளாஸ்டிக் சர்ஜரி துறையைச் சேர்ந்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரனுக்கு முதல்வர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி இருதயவியல் துறைத்தலைவர் திருமால் பாபுவை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முழு நேர முதல்வராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் அவர் பொறுப்பேற்பார் எனத்தெரிகிறது.


சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக பதவி உயர்வில் வரும் மருத்துவர் திருமால் பாபுவின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகும். தற்போது வேலூர் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.


இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. மகப்பேறு மருத்துவரான இவர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரமோத் என்ற மகனும், சாய் பிரத்திகா என்ற மகளும் உள்ளனர். இருவருமே பெங்களூரில் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். மருத்துவர் திருமால் பாபு, கடந்த 2011ம் ஆண்டே, சேலம் அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் பணியாற்றி இருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில்தான் இருதயவியல் துறைக்கு கேத்லேப் துறை புதிதாக தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்