சேலம் மாநகராட்சி ஊழியர் ஒருவர், நான்கே ஆண்டுகளில் வருமானத்தை விட 480 சதவீதம் வரை சொத்து குவித்துள்ளது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம், கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அலுவலராக (ஏ.ஆர்.ஓ.) பணியாற்றி வருகிறார். கடந்த 2011 முதல் 2014ம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஏ.ஆர்.ஓ. தமிழ்மணி, அவருடைய மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில், தமிழ்மணி வருமானத்தை விட 480 சதவீதம் சொத்து சேர்த்து இருப்பதும், கணக்கீட்டு காலத்தில் மட்டும் 40 லட்சம் ரூபாய் சொத்துகளை வாங்கிப் போட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவலர்கள் கே.ஆர்.தோப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் டிச. 28ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். 7 மணி நேரம் சோதனை நடந்துள்ளது.
அவருடைய வீட்டில் இருந்து சொத்து பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர். வங்கி லாக்கரின் சாவியும் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, வங்கி லாக்கரை திறந்து பார்க்க லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்மணி, அவருடைய மனைவி ஆகியோரிடம், எந்தெந்த வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளனர்? யார் யார் பெயர்களில் அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை விசாரித்தனர். இரண்டாவது நாளாக தமிழ்மணியிடம் டிச. 30ம் தேதி நேரில் விசாரணை நடந்தது. இந்த சம்பவம், சேலம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.