சாலை விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் மனைவி எம்.சுகந்தி. இவர் சென்னை மோட்டார் விபத்து தீர்ப்பாய நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2018 ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி அன்று தனது கணவர் மோகன் போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கத்திபாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சென்னை மாநகர பேருந்து ஒன்று அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்து எனது கணவர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மோகனை பரங்கிமலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்குள்ள மருத்துவர் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததால் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்தார்.
மனுதாரரின் இந்த குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மறுத்தது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விபத்தில் இறந்த நபர் பேருந்தின் இடது பக்கத்தில் இருந்த ஒரு குறுகிய இடைவெளியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். இதனால் அவர் நிலை தடுமாறி பஸ் டயருக்கு இடையில் விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும், விபத்துக்கு முக்கியக் காரணம் குறுகிய இடைவெளியில் தவறான பக்கத்திலிருந்து பேருந்தை முந்திச் செல்ல முயன்றதே ஆகும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றம் விபத்துக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 47.43 லட்சம் ரூபாய் வழங்குமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.