சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கம் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''உதயநிதி அவரது தாத்தா பெயரை வைப்பதற்காக என்னை விமர்சிக்கிறார். பொதுமக்களின் வரிப்பணத்தை விரயம் செய்து 82 கோடி மதிப்பில் பேனா நினைவு சின்னம் தேவையா? விவசாயிகள், பெண் தொழிலாளர்களுக்கு காலணி இல்லாத நிலையில் கார் பந்தயம் தேவையா? இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. திமுக ஆட்சியில் ஊழல் செய்யாத துறையே இல்லை. காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்ததின் காரணமே ரெய்டு வந்து விடக்கூடாது என்பதற்காக தான். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் அதிமுக மக்களுக்காக போராடத் தயாராக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை முடக்கி வைத்திருக்கிறது திமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார்; மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் திமுகவும்தான். 2010ல் டிசம்பர் 21 அன்று நீட் தேர்வு நோட்டிபிகேஷன் வெளியானது. திமுகவும் காங்கிரசும் ஆட்சியில் இருந்தபோது காந்தி செல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டு வந்தீர்கள். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றீர்கள். 42 மாதம் உருண்டோடி விட்டது. இருந்தும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை.
உதயநிதி பேசும் பொழுது நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றார். 42 மாதமாக அந்த ரகசியத்தை மூடி வைத்திருக்கிறார்கள். சீக்கிரம் அந்த ரகசியத்தை வெளியிடுங்கள் நீட் தேர்வு ரத்தாகட்டும். எப்படியெல்லாம் மக்களிடம் பொய் பேசி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். என்பதற்கு இது ஒன்றே போதும். நீங்கள் தான் பொய்யர் நாங்கள் அல்ல'' என்றார்.