Skip to main content

மனநல காப்பகத்திலிருந்து 4 பேர் தப்பி ஓட்டம்!

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

4 people escaped from Cuddalore mental asylum

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலிபுலியூரில் 'நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் காப்பகம் இயங்கி வந்தது. இந்த காப்பகம் மீது வந்த புகார்களின் அடிப்படையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மீட்கப்பட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

 

அந்த வகையில் அரசு நிதி உதவியுடன் கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கும் கருணா மனநல காப்பகம், மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் இயங்கி வரும டாக்டர் தவராஜ் மனநல காப்பகம் ஆகியவற்றில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர். புதுப்பாளையம் காப்பகத்தில் தங்கியுள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கச் சென்றனர். குண்டலிப்புலியூர் காப்பகத்தில் இருந்து வந்திருந்த 13 பேர் முதல் தளத்தில் உள்ள அறைக்கு உறங்க சென்றனர். காப்பக ஊழியர்கள் தனி அறையில் உறங்கினார். நேற்று காலை ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது முதல் தளத்தில் உள்ள பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அந்தத் தளத்தில் தங்கி இருந்தவர்களில் 4 பேரை காணவில்லை. ஜன்னலின் வெளிப்புறத்தில் போர்வை தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காப்பக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் குண்டலிப்புலியூர் காப்பகத்தில் இருந்து வந்தவர்களில் 4 பேர் நள்ளிரவில் காப்பகத்தின் பின்பக்கக் கதவை உடைத்து, போர்வைகளை ஒன்றாகச் சேர்த்து கட்டி, அதன் வழியாக இறங்கி தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய நான்கு பேரையும் போலீசார் தேடி வந்தனர். அதில் 70 வயது நபர் மட்டும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நான்கு பேர் மனநல காப்பகத்திலிருந்து தப்பித்து சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்