சேலம் வழியாக கேரளா சென்ற பயணிகள் விரைவு ரயிலில், கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் நாள்தோறும் ரயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது. தொடர்ந்து கடத்தல் கஞ்சா கைப்பற்றப்படுவதோடு, அவ்வப்போது கடத்தல் ஆசாமிகளையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் ரயில்வே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர், தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டி ரயில்நிலையத்தில் இருந்து ஏறி சோதனையில் ஈடுபட்டனர். பின்பக்கத்தில் இணைக்கப்பட்டு இருந்த முன்பதிவில்லா பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையில், கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு பை கிடந்தது தெரியவந்தது. அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை செய்தபோது, அதற்குள் 4 கிலோ கஞ்சா பொட்டலமாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றினர்.
காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதை அறிந்த மர்ம நபர், கஞ்சா பையை கழிப்பறை அருகே வீசிவிட்டு ரயிலில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.