கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் ரெங்கநாதன். இவருக்கு சொந்தமான முந்திரி காட்டின் அருகே வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளது. அந்த காட்டில் வன விலங்குகளான காட்டுப்பன்றி, மான் மற்றும் காட்டு முயல்கள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில் காட்டுப்பன்றியின் கறிக்கு ஆசைப்பட்டு அக்கிராமத்தை சேர்ந்த ஆறுமுகனின் மகன் ரங்கநாதன் (52), உக்கிரவேல் மகன் மதுரபாண்டி (26), காசி மகன் இளைய குமார் மற்றும் ஏழுமலையின் என்பவரின் மகனான 13 வயது சிறுவன் ஆகிய நால்வரும் ரங்கநாதனுக்கு சொந்தமான முந்திரி காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வெடிமருந்து, கூழாங்கற்கள், ஆணி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் நான்கு நபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சிறுவன் உட்பட நான்கு நபர்களும் உடலில் பலத்த தீக்காயங்களுடன் துடிப்பதை கண்டு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து ஆலடி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் முந்திரிக்காடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித நாட்டு வெடிகுண்டுகளும் கிடைக்காததால் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது வெடி மருந்து இருந்த பேப்பர்கள், கூழாங்கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இச்சம்பவத்தில் ரங்கநாதனின் கால் துண்டாகி சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு கிடந்ததையும் காவல்துறையினர் கைப்பற்றினர். காட்டுப்பன்றியின் கறிக்கு ஆசைப்பட்டு அதை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட நான்கு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.