புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடியரசு தின வாலிபால் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொள்ள திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி தனியார் கல்லூரிக்கு சென்று பங்கேற்றுள்ளனர்.
போட்டிகளை முடித்துக்கொண்டு திரும்பியபோது கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டு அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தினர் பள்ளி வளாகத்தில் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மயக்கமடைந்தனர்.
இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி பலியான மாணவிகளின் சடலங்கள் கரூர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், உறவினர்கள் அங்கு செல்லும் முன்பே பிரேதப் பரிசோதனை செய்துவிட்டதாகக் கூறியும், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கிராம மக்கள் இலுப்பூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உயிரிழந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகியோரின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.