அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த அயற்பணி பேராசிரியர்கள் நல சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரொனால்ட் ரோஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகப்பன் காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் ஆண்டு அறிக்கை வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.
கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளாக இணைத்ததற்கு உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்களுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் காலிப் பணியிடம் உருவாகும் போது அயற்பணி சென்ற ஆசிரியர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்ப பணி மூப்பு அடிப்படையில் அழைக்க வேண்டும் உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பொருளாளர் கணேசமூர்த்தி நன்றி தெரிவித்தார்.