தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.