மக்களாட்சித் தத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகிற அதிமுக அரசு ஆகிய இரண்டையும் வீழ்த்துவதற்காக திமுக தலைமையில், தோழமைக்கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டை அடுத்த மூலக்கரையில் நேற்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு மதிமுக அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமை வகித்தார். மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி மாநாட்டினைத் திறந்து வைத்தார். மதிமுக துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மதிமுக கொடியை ஏற்றி வைத்தார். மல்லை சி.இ.சத்யா வரவேற்புரையாற்றினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
நாட்டின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மைத் தத்துவம் போன்றவற்றிற்கு, இந்து மத வெறி அமைப்புகளால் தொடர்ந்து பேராபத்து விளைவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் முகவரான ஆளுநர் மூலம் நேரிடையாக ஆட்சி செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டு, கூட்டு ஆட்சிக் கோட்பாட்டை மத்திய அரசு தகர்த்து வருகிறது. மக்களாட்சித் தத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகிற அதிமுக அரசு ஆகிய இரண்டையும் வீழ்த்துவதற்காக திமுக தலைமையில், தோழமைக்கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, நீரைத் திறந்து விட வேண்டிய சட்டப்பொறுப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட உரிமையை இழந்து விடாமல், உச்சநீதிமன்ற வழக்கை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். காவிரிப்படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட்டு, பாசனப்பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தால், மக்கள் அறப்போர் கிளர்ச்சி வெடிக்கும். விளைநிலங்களின் வழியே கெயில் எரிவாயு குழாய்களைப் பதிக்காமல், தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டியாறு -புன்னம்புழா திட்டம் தொடர்பாக கேரளாவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சேலம் - சென்னை இடையேயான எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும். முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் விசாரணை நடத்துவதற்கும், அரசு ஒப்பந்தப் பணிகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிப்பதற்கும் ஏற்றபடி லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடற்தொழில் சட்டத் திருத்தம் மூலம், தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு இலங்கை அரசிற்கு உரிய எச்சரிக்கை செய்து, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி, முழு மதுவிலக்கை தமிழகத்தில் அமல் படுத்த வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து நீட் நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும். பணி ஆணைகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்குவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட 35 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இத்துடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.