சேலம் அருகே, ஜவுளி வியாபாரியிடம் துணிகளை கொள்முதல் செய்து கொண்டு, அதற்குரிய 35 லட்சம் ரூபாயைத் தராமல் மோசடி செய்த கணவன், மனைவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (48). ஜவுளித்தொழில் செய்து வருகிறார். இவர், சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி., சிவக்குமாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: நான் ஜவுளி உற்பத்தி செய்து மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2017ம் ஆண்டில் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த, கார்மெண்ட்ஸ் நடத்தி வரும் சுதா, அவருடைய கணவர் அருண் ஆகியோர் என்னிடம் மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்தனர். துணிகளுக்கான பணத்தை சிறிது சிறிதாக கொடுத்து விடுவதாகக் கூறினர். அதற்கு நானும் ஒப்புக்கொண்டேன்.
அதன்படி, 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 36.27 லட்சம் ரூபாய்க்கு என்னிடம் துணிகளைக் கொள்முதல் செய்தனர். அதற்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். அதன்பின் நிலுவைத்தொகை 35.27 லட்சத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, பணத்தைப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு, மாவட்டக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்ததை அடுத்து, சுதா, அருண் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.