சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). இவருடைய மனைவி பொன்னையா (48). இவர்களுக்கு உமாசங்கர் (36), மகேந்திரன் (35) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014 வரை ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு அடைந்த பிறகும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முதலீட்டாளர்கள் பலமுறை பணத்தைத் திருப்பிக் கேட்டும், தராமல் இழுத்தடித்து வந்தனர்.
ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், தங்கராஜ், பொன்னையா, உமாசங்கர், மகேந்திரன் ஆகிய நான்கு பேர் மீதும் காவல்துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தங்கராஜ் குடும்பத்தினர் 34.26 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை, சேலம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 4.30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.