வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் இருந்து விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் ஆய்வுக்கு பின் சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''தமிழக முதல்வரின் கட்டளையின்படி இன்று ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணியை ஆய்வு செய்திருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளோம். 1499 வாட்டர் பம்ப்புகள் தயாராக உள்ளது. அக்டோபரில் பெய்த மழை அனுபவத்தின் அடிப்படையில் கண்காணிப்பு அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் மோட்டார்களை அமைத்துள்ளோம்.
329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 129 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர மற்ற 21 சுரங்கப் பாதைகளும் வழக்கமான போக்குவரத்து நிலையில் இருக்கிறது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைபாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றார்.