சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 லட்சத்து 48 ஆயிரத்து 824 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் செய்தல் உள்ளிட்ட சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடந்தன. இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
சுருக்கமுறை திருத்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 30 லட்சத்து 48 ஆயிரத்து 824 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 15 லட்சத்து 13 ஆயிரத்து 360 பேர் ஆண்கள்; பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 35 ஆயிரத்து 240 பேர் உள்ளனர். இதர வாக்காளர்கள் 224 பேர் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக நடந்த சுருக்கமுறை திருத்தத்தின் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 49,174 வாக்காளர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. 17,953 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 18-19 வயதுடைய வாக்காளர்கள் மட்டும் 22,134 பேர் ஆவர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்களே சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், திமுக மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.