
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிந்தது. இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கையும் கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்திருந்தது. அதேபோல் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத்திற்காக நிதி உதவியும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளைச் சரிசெய்ய 14 துறைகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை பெய்த பருவமழை காரணமாக 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை சீர் செய்ய சென்னை மாநகராட்சிக்கு 132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.