Skip to main content

"3 முறை துப்பாக்கிச் சத்தம்... என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டனின் பின்னணி..!"

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

கடந்த ஜூன் 15-ந்தேதி சென்னையில் ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தாதாவாக திகழ்ந்த மணிகண்டனுக்கு, தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக்கின்றனர் தனிப்படை போலீஸார்

யார் இந்த மணிகண்டன்?

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டப்பஞ்சாயத்து, கஞ்சாவிற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், ரவுடியிசம், கூலிக்கு கொலை என சகலத்திலும் கொடிகட்டி பறந்ததால், பெயருக்கு முன்னால் தாதா என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.

rowdy


இவருக்கு போட்டியாக பூபாலன் என்பவரும் களத்தில் இறங்க, 2 தரப்பிலும் பல கொ(த)லைகள் விழுந்தன. விழுப்புரம் எஸ்.பியாக இருந்த நல்லசிவம், பெரிய்யா, அமல்ராஜ் ஆகியோர் இரு தரப்பையும் எச்சரித்தாலும் சட்டவிரோத செயல்களும் தொடர்ந்தன. இதனால், மணிகண்டன் மீது ஆரோவில், மயிலம், கோட்டக்குப்பம், செஞ்சி, திருவண்ணாமலை என பல்வேறு காவல் நிலையங்களில் 8 கொலை வழக்கு உட்பட 28 வழக்குகள் பதிவாகின.

2010-ஆம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலை செய்தது. இதன்பிறகும் தாதா மணிகண்டனின் குற்றச்செயல்கள் அதிகரித்தன. இதனால், 'என்கவுன்டர் 'லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டன் பெயர் சேர்க்கப்பட்டது.

 

rowdy


உயிருக்கு பயந்து தாம் திருந்தி வாழப் போவதாக  2015-ல் அப்போதைய எஸ்.பி அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன். 'நான் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் பெயரை சொல்லி சிலர் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பூபாலன் குரூப் ஆரோவில்லில் பெண்களை வைத்து தொழில் செய்கின்றனர். ஆனால், அவர்கள் என் பெயரை பயன்படுத்துவதால், போலீஸார் என்மீது வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எஸ்பி ஐயாவை பார்த்து திரிந்து வாழ மனு கொடுத்துள்ளேன்'என அப்போது ஊடகங்களிடமும் தெரிவித்தார் மணிகண்டன்.

மீண்டும் சட்ட விரோத செயல்.?

பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது என்பதை போல், கொஞ்சநாள் ஒதுங்கியே இருந்த மணிகண்டன், மீண்டும் தாதா வேடம் பூண்டார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த முக்கிய காங். பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் விழுப்புரம் போலீஸார் தேடி வந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு தான் சென்னை வந்து குடும்பத்துடன் வசித்துள்ளார். இன்று மாலை(24-09-201) விழுப்புரத்தில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர்.

 

rowdy


பின்னர் அவனை பிடிக்க முயன்றபோது, போலீஸாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளான். இதனால், போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தான்.

 

rowdy


4 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழ் தளத்தில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துள்ளான். 6-15 மணியளவில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால், மேல் தளத்தில் வசித்தவர்கள் கீழே வந்து பார்த்துள்ளனர். அப்போது, கூட்டமாக இருந்த போலீஸார், மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். மொத்தம் 3 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்