சாராய வேட்டைக்குச் சென்ற இடத்தில் சாராய வியாபாரிகளின் வீட்டை உடைத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கள்ளச்சந்தையில் மது விற்பனை, அதேபோல் கள்ளச்சாராயம் ஊறல் போடுவது போன்ற சம்பவங்கள் பெருகிவரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், வேலூரில் 2 சாராய வியாபாரிகளின் வீட்டில் சாராய வேட்டையின்போது நகை, பணம் திருடியதாக எஸ்.ஐ மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு குருமலை அருகே நச்சுமேடு மலைப்பகுதியில் சாராய வேட்டைக்கு அரியூர் போலீசார் சென்றுள்ளனர். அப்போது சாராய வியாபாரிகள் இளங்கோ, செல்வம் ஆகிய இருவரது வீடுகளின் பூட்டை உடைத்து சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அங்கு சாராயம் மற்றும் சாராய ஊறல்களைப் பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்.ஐ. அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.