Skip to main content

தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி 24 பேர் படுகாயம் 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

3 people were passed away  collision between car and private bus Cuddalore

 

கடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று தனியார் பேருந்து ஒன்று 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த அந்தோணிசாமி குடும்பத்தினர் ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டையில் தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு திருமணம் முடிந்து மாருதி ஸ்விஃப்ட் காரில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

 

அப்போது  அதிவேகமாக வந்த பேருந்து வடலூர் அருகே ராசாக்குப்பம் கிராமத்தில் வந்த போது டயர் பஞ்சரானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஸ்விப்ட் கார் மீது மோதிய பின்னரும் நிற்காமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி நின்றது. இதில் காரில் பயணம் செய்த அந்தோணிசாமி மனைவி விக்டோரியா(65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம்(52), அவரது மனைவி குணசீலி(50) மகள் ரித்திகாமேரி(10) உறவினர் பொன்னம்மாள்(60) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

 

மேலும்  புவனகிரி அருகேயுள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டபாணி மகன் தாமரைச்செல்வன்(23), ஏழப்பன் மகன் விஜயகுமார்(22) ஆகியோர் நெய்வேலியில் சமையல் வேலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாத்தப்பாடி சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீதும் மோதியது. அதில், தாமரைச்செல்வன், விஜயகுமார் இருவரும் பேருந்து சக்கரத்தின் உட்பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அருகிலுள்ள வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

 

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டு தவித்த இருவரையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பேருந்தை நகர்த்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டனர். ஆனால் இருவரும் உயிரிழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விக்டோரியா, தாமரைச்செல்வன், விஜயகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்து படுகாயமடைந்த ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ராஜேஸ்வரி(30),  வன்னியர்பாளையம் கோவிந்தராஜ் மகன் ஜெய்சங்கர்(53), காரைக்கால் தனசேகர் மகள் அர்ச்சனா(20) பச்சைபெருமாள் கோயில் குமாரலிங்கம் மகள் துர்காதேவி(31) விருத்தாசலம் ஜெயராமன் மகன் மணிகண்டன்(42) உட்பட 24 பேர் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் 15 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்ததும் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கடலூர் டி.எஸ்.பி பிரபு நேரில் சென்று விபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இதுகுறித்து  வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தப்பி ஓடிய பேருந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்