உலகம் முழுவதும் உருமாறிய கரோனாவான ஒமிக்ரான் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்வேறு நாடுகள் சர்வதேச விமான எல்லைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன.
ஆனால் இந்தியாவில் இதுவரை சர்வதேச விமான எல்லைகள் மூடப்படவில்லை. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அனுமதிக்கப்படுகிறனர். அதில் மிக முக்கியமானது ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ். ஆனால், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் ஒரு சிலர் போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை காண்பித்து வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (16.12.2021) இரவு சிங்கப்பூர், கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் தஞ்சை, தென்காசி, மாயவரம் உள்ளிட்ட 3 ஊர்களைச் சேர்ந்த 40 வயதிற்கு மேல் உள்ள 3 பேர் போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளோடு வந்துள்ளனர். QR கோடுகளை ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்த முடிவுகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை முடிவுகளைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதற்கு முன்பு பயணம் செய்த பயணிகளின் பரிசோதனை முடிவுகளைப் போலியாக மாற்றி தங்களுடைய பெயரில் மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பயணிகளையும் விமான நிலையத்திற்குள் உள்ள தனியார் ஆய்வகம் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
போலியான பரிசோதனை முடிவுகளோடு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் பயணிகளால் ஒமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.