தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி 1.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் நேற்று (28/04/2021) மாலை தொடங்கியது.
இந்நிலையில், முதற்கட்டமாக 1.5 கோடி கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து, மும்பையில் இருந்து விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இன்று (29/04/2021) சென்னை வந்தது. இன்றைய வருகையைச் சேர்த்தால் மொத்தம் 8.6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. மேலும், தமிழகத்திற்கு இதுவரை 60.03 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது.
94 நாட்களில் 56.68 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.