கடலூர் மாவட்டத்தில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சோதனைகள் நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி முதல் இதுவரை 199 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 91 கிலோ 331 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலில் பயன்படுத்திய 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 51 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1608 கிலோ குட்கா மற்றும் கடத்தலில் பயன்படுத்திய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனை முற்றிலும் தடுக்கும்பொருட்டு அந்தந்த காவல் உட்கோட்ட டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த பொதுமக்கள் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர், கே.ஆர். எம். நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்வி பயில வந்த வெளிநாட்டு மாணவர்கள் இங்கு உள்ளவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ரகசியமான முறையில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பொட்டலங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.