திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைவர் ராமமூர்த்தி இன்று (03.11.2021) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான திருட்டு வழக்குகளில் சுமார் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 52 ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 121 ரவுடிகள் மீது 110ன்படி நன்னடத்தை முறையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 5,78,490 வழக்குகள் பதிவுசெய்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அபராத தொகை பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4,06,438 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2,43,89,600 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு போக்குவரத்து துறை மீறல்கள் என 1,72,052 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆண்டு 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 'உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவலர்கள் குறைதீர் கூட்டத்தில் 267 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உரிய காலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.
தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 6 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது அவர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில் சட்டவிரோத சில்லறை மது விற்பனை, பட்டாசு விற்பனை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் 5 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் கொண்டாட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு 50 அலுவலர்கள், 250 காவலர்கள் என மொத்தம் 300 பேர் பணியாற்றி வருகின்றனர்.