வேலூரில் அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை முழுவதுமாக இடிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் புதிதாக அதி நவீன வசதிகளுடனான மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனைத் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று திடீரென ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் அப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கார்த்திகேயன் இம்மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாததால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்று 150 கோடியில் அதி நவீன மருத்துவமனை பணிகள் நடக்கிறது. பணிகளை விரைந்து முடிக்க இதனை மூன்று பிரிவுகளாக பிரித்து பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி தொகையில் கட்டினார்கள். ஆனால் நாங்கள் ரூ.150 கோடியில் கட்டடங்களை அமைக்கிறோம். பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகள் தர பரிசோதனை மையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே விரிஞ்சிபுரத்தில் மேம்பாலம் அமைக்க துறையின் மூலம் ஆய்வுகள் செய்து வரைபடம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. காட்பாடியிலும் புதிய ரயில்வே மேம்பாலம் ஒன்று விரைவில் அமையும். அதிமுக ஆட்சியில் பல ரயில்வே மேம்பால பணிகள் துவங்கினர். அதனை முடிக்காமல் விட்டுவிட்டார்கள். அதற்கு காரணம் இணைப்பு சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தாமல் விட்டுச் சென்றனர். அவற்றை கணக்கெடுத்து அந்த பணிகளும் தற்போது நடக்கிறது.
செங்கல்பட்டு அருகே செய்யூரில் இருளர் சமுதாயம் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. அது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இல்லை, உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறை கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.