வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.