
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள மேலக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சக்திவேல் என்ற 45 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நெய்வேலி காவல் உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஊ.மங்கலம் காவல்துறையினர் முதனை கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். காவல்துறை அதிகாரிகள் நிற்பதை கண்ட டாடா ஏஸ் வாகன ஓட்டுனர், வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஊ.மங்கலம் காவல்துறையினர் டாடா ஏஸ் வாகனத்தை சோதனையிட்ட போது, பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசி மூட்டைகள் வாகனம் முழுவதும் இருப்பது தெரியவந்தது. மேலும் டாடா ஏஸ் வாகனத்தில் 35 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முற்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கடலூர் குடிமை பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து வந்த போலீசார் டாடா ஏஸ் வாகனம் மற்றும் அதிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? ரேஷன் அரிசி மூட்டைகளை எங்கு கடத்த முயன்றனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.