வருகிற ஏழாம் தேதி வரை 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்காது என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்துள்ள ரேடியோ சாலை பகுதியில் இரண்டு தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றது. அப்பொழுது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்பொழுது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதே நேரம் தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கையில் “அனுமதியை நீட்டிப்பதற்காக அதிகாரிகளை அணுகிய பொழுது உரிய பதில் தராமல் இழுத்தடிப்புச் செய்கின்றனர்” என்று குற்றச்சாட்டை வைத்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கரணை ரேடியோ சாலையில் இருக்கக்கூடிய திருமண மண்டபம் ஒன்றில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அச்சங்கத்தின் தலைவர் நிஜசலிங்கம் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், வருகின்ற ஏழாம் தேதி திங்கட்கிழமை வரை 25 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.