திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவின் தலைமையில், அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு நன்றி செலுத்தும்விதமாக சமூகநீதி குறுந்தகடு வெளியிடப்பட்டது.
மேலும், காவிரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ஓரணியில் நிற்க வேண்டும்
, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும் அதன் ஆன்மாவாய்த் திகழும் சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை ஆகிய கொள்கைகளையும் மறைமுகமாய்ச் சிதைத்து வரும் சங்பரிவாரத்தின் அரசியல் கிளையான பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் மாபெரும் அபாயங்களைச் சந்தித்து வருகிறது.
அமைச்சரவையையோ, நாடாளுமன்றத்தையோ ஆலோசிக்காமல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புச் செய்து மக்களை துன்புறுத்தியது, மணிப்பூர் மற்றும் கோவாவில் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் அங்கு பாஜக அரசை அமைத்த்து, ஆதார் தொடர்பான சட்டமுன்வடிவை ஒரு பொருளாதார மசோதவாக கொண்டு வந்து அதன் மூலம் விவாதமில்லமல் மாநிலங்களவையில் நிறைவேற்றியது, பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் அரியானவில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கல்வி தகுதி அவசியம் என்று சட்டமியற்றி, பெண்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தடுத்த்து, தமிழக சட்டமன்றம் நீட் வேண்டாம் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்தது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரசமைப்புச் சட்டத்தை நீர்த்து போக மோடி அரசு செய்து வரும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றன.
ஆதிக்கசாதியினரின் நம்பிக்கைக்காக பெரும்பான்மையான மக்களின் உணவு உரிமை, பண்பாட்டு உரிமை, வழிபாட்டு உரிமைகள் மோடி ஆட்சியில் மோசமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசுகளின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாகவும், தேசத்தந்தை காந்தியடிகளின் உணர்வாகவும் திகழும் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்க வேண்டும் எனவும், பாசிச பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி வீரியப் பணிகளை ஜனநாயக வழியில் மேற்கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2. வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு மாற வேண்டும்
மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்து பல்வேறு குற்ற சாட்டுகளும் முறைகேடுகளும் கூறப்பட்டு வருகின்றன குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் தில்லுமுல்லுகள் சரமாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச் சீட்டு முறைக்கு வளர்ந்த நாடுகளே திரும்பியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்கள் தீர்ப்பை உண்மைப்படுத்த உறுதி படுத்த மக்களாட்சியை வலுப்படுத்த மக்களாட்சி கட்டுமானத்தை கட்டிக்காக்க வாக்களிக்கும் முறையை வாக்கு சீட்டு முறைக்கு மாற்றவேண்டும் என தேர்தல் ஆணையத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. சட்டமியற்றும் அவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க நடவடிக்கை தேவை
செழிந்தோங்கும் ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய பண்பு அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை அனைத்து மக்களும் உளமார உணர்ந்திருப்பது தான். ஆனால் . தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நசிந்து வருவதை இம்மாநாடு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் சிறுபான்மை முஸ்லிம்கள் திரளாக இருக்கும் பகுதிகள் பிரிக்கப்பட்டு இதன் காரணமாகவும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நீதியரசர் சச்சார் குழுவின் அறிக்கையும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி மன்றம், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிகாரிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எ\டுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
4. மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்
ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சின் தலைவராக இருந்த எம் எஸ் கோல்வால்கர் இந்தியாவில் மத்திய அரசு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தி இந்தியா ஒரு கூட்டாட்சி என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறையை எதிர்த்து வந்தவர். கோல்வால்கரின் வழி வந்த இன்றைய மோடி தலைமையிலான மத்திய அரசு.மாநிலங்களின் உரிமைகளை பறித்து அதிகார குவிப்பில் இறங்கி வருகிறது . ஆளுநர்கள் மத்திய ஆளுங்கட்சியின் முகவர்களாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் செயல்படுகின்றனர். குறிப்பாக டெல்லி , புதுவை உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிர்வாக கடமைகளை ஆளுமைத்திறனுடன் நடத்துவதற்கு இடையூறு விளைவித்து வருகின்றளர். முன்னேறிய மாநிலங்களான தமிழ்நாடு கேரளா கர்நாடகா , தெலங்கானா , ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமைகளை முடக்கும் வண்ணம் மேற்கண்ட மாநிலங்களுக்கு மத்திய நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது தமிழக சட்டமன்றம் நீட் தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் அதனை மத்திய அரசு உதாசீனப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி அரசியலமைப்புச் சட்டம் வழியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டி மாநிலங்களின் உரிமைகளை காக்க அனைவரும் பாஜகவிற்கு எதிராக ஓரணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.
5. சமூக நீதி
தேச விடுதலைக்கு மாபெரும் தியாகங்களைச் செய்ததில் முதன்மையான இடத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம், விடுதலைப் பெற்ற இந்தியாவில் பாசிச சதிகளால் அனைத்துத் துறைகளிலும் பெரும் புறக்கணிப்புக்கு ஆளாகி இருப்பதை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் குழுவின் அறிக்கைத் துல்லியமாக நிரூபித்தது. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், பரிந்துரைத்த தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை சமூகத்தின் உரிமைகளே அன்றி சலுகைகள் அல்ல. முறையான ஆய்வுகளுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சமூகநீதிப் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்டு அனைவருக்கும் அவர்களது விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
6. காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமைக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் 35ஏ 370 பிரிவுகளை நீக்கக்கூடாது
இந்தியாவோடு இணைந்து வாழும் ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக 35ஏ 370 ஆகிய பிரிவுகளை நீக்கவேண்டும் என்ற விஷமப் பரப்புரையை மதவெறி சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. பாஜகவின் அஷ்வின் உபாத்யாயா என்பவர் மேற்கண்ட பிரிவுகளை நீக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் அரசியலமைப்பு உரிமையை கேள்வி எழுப்புவதும் காஷ்மீர் மக்களின் உரிமைக்கு ஊறு விளைவிப்பதாகும். இன்றைய மத்திய ஆட்சியில் ஒவ்வொரு மாநிலமும் தம் தனித்தன்மையை உரிமைகளை இழந்து தவித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
7. முத்தலாக் அவசர சட்டத்தை திரும்ப பெறுக
முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதையே முழுமுதல் கடமையாக கொண்டுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் அவசர சட்டத்திற்கு இம்மாநாடு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது
நாடாளுமன்றத்தில் முத்தலாக் குறித்த சட்ட முன்வரைவு நிலுவையில் இருக்கும் நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பையும் பெருமிதத்தையும் குலைக்கும் நோக்குடன் முத்தலாக் குறித்து அவசர சட்டத்தை மோடி அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25க்கு முரணானது. முஸ்லிம் மகளிரின் மேல் எவ்வித அக்கறையும் அற்ற , இந்த அரசு முஸ்லிம் மகளிரின் வாழ்வை கேள்விக்குறியாக்கி முஸ்லிம் இளைஞர்களை நிரந்தர குற்றப்பிரிவினராக மாற்றும் சதித்திட்டத்துடன் இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது. கோடிக்கணக்கணக்கான மக்களின் அதிருப்தி தீயை அணைக்க உடனடியாக இந்த அவசர சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என இம்மாநாடு கோருகிறது
8. விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும்
தற்போதுள்ள தேர்தல் முறை மக்களின் முழுமையான பிரநிதித்துவத்தை செயல்படுத்துவதாக உள்ளதா என்ற கேள்விக்குறி அனைத்து ஜனநாயக சக்திகளிடமும் எழுந்துள்ளது.
எடுத்துக்காட்டாக 2 014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 இலட்சத்து, 37 ஆயிரத்து, 684. இது பதிவான மொத்த வாக்குகளில் 31 சதவிகிதம். ஆனால், அக் கட்சிக்கு 282 எம்.பி.க்கள் உள்ளனர். இது மொத்தமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 51.9 சதவிகிதம்.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே 69 இலட்சத்து, 35 ஆயிரத்து, 311 வாக்கு கிடைத்தன. இது 19.3 சதவிகிதம். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 44 மட்டுமே. இது எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 8.1 சதவிகிதம் தான் நாட்டில் இரண்டாவதாக வாக்குகளை அதிகம் பெற்ற ஒரு பெரிய கட்சிக்கே சரியான விகிதாச்சாரமான முறையில் பிரதிநிதித்துவம் வழங்கமுடியா நிலையில்
நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் பல்வேறு கட்சிகளுக்கு
வாக்களிக்கும் மக்களின் வாக்குகள் உரிய பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்க முடியுமா என்ற வினா எழுகிறது. அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில மக்களின் பிரதிநித்துவம் இருந்தால் மட்டுமே அது முழுமையான மக்களாட்சி தத்துவத்தை செயல்படுத்துவதாக அமைய முடியும் என்பதால் விகிதாச்சார தேர்தல் முறையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த விகிதாச்சார முறை 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளன. உள்ளன. மக்களின் வாக்கு மதிப்பை வீணாக்காத விகிதாச்சாரத் தேர்தல் முறையை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.
9. ஸ்டெர்லைட்
தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்து வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் நன்மைக்காக, ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி, மாநில அரசின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் பலியானதை இம்மாநாடு துயரத்தோடு நினைவு கூர்கிறது.
இத்தனை உயிர்பலிகளுக்குப் பின் எக்காரணத்தை முன்னிட்டும் நாசகர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
10. ஹைட்ரோ கார்பன்
கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி போல மத்திய அரசு செயல்பட்டு வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சரும் அடாவடியாகக் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதியில் முதல் கட்டமாக 24 கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க , ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licensing Policy) எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவை புறக்கணித்து தமிழகத்தின் நிலம், நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழலை நாசமாக்கி, சோலைவனத்தை சுடுகாடாக்கப் பார்க்கும் மதவாத மத்திய அரசின் இம்முடிவை இந்த மாநாடு மிக வலிமையாக கண்டிப்பதோடு, இத்திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது.
11 காவிரி படுகை பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி படுகைப் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக உடனடியாக அறிவித்து அங்கு மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுப்பது உட்பட எவ்வித வேளாண்மைக்கு விரோதமானத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
12. சாகர்மாலா திட்டத்தை கைவிட வேண்டும்
நாட்டின் கடல் வளத்தையும் நீர் நிலைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் சாகர்மாலா திட்டத்தை உடனே கைவிடுமாறு இம்மாநாடு கோருகின்றது. சாகர்மாலா திட்டம் இந்திய குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் செயல் என இம்மாநாடு கருதுகிறது. மீனவர்களுக்கும் கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர் நிலைகளுக்கும் மீள முடியாத பேரழிவு ஏற்படுத்தும் சாகர்மாலா திட்டத்தை மக்கள் நலன் நாடும் அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. யு ஏ பி ஏ சட்டத்தை திரும்ப பெறுக
யு ஏ பி ஏ என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி இந்திய அளவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு தொடுத்துத் துன்புறுத்தும் போக்கை கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது . தமிழகத்திலும் இது போன்ற செயல்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புரையை மேற்கொள்ளும் பல்வேறு சங்கபரிவார் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகள் சமூகச் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து யு ஏ பி ஏ போன்ற சட்டங்களை வைத்து ஒடுக்கிட நினைப்பது நியாயமற்றது கண்டனத்துக்குரியது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனி நபர் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடியது. சமூக செயற்பாட்டாளர்கள் மீதான யு ஏ பி ஏ சட்டத்தை திரும்ப பெறுவதோடு அந்த சட்டத்தையும் ரத்துச் செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
14. முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலைச் செய்க
:
10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைகளில் வாடும் முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. மனித உரிமை தளங்களில்
பரவலாக கவன ஈர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பாரபட்சமான போக்கு தொடர்வது ஜனநாயக அரசுக்கு உகந்தது அல்ல. பன்னெடுங்காலம் காராக்கிருகம் என்ற தனிமை சிறையில் அடைபட்டு உடல்நிலை மோசமடைந்து துன்பத்தில் உழலும்
சிறைவாசிகளை காலதாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசு முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலையில் தொடர்ந்து பாரபட்ச போக்கை கடைபிடித்தால் மாநில தழுவிய போராட்டத்தை நடத்த நேரிடும் என இம்மாநாடு எச்சரிக்கின்றது.
15. பேரறிவாளவன் உள்ளிட்டோர் விடுதலையை தாமதப்ப|டுத்துவது சரி அல்ல
கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உச்சநீதிமன்றத்தின் அறிவிப்புக்கு பிறகும் அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை விடுதலைக்கு பரிந்துரைச் செய்த பிறகும் அவர்களை விடுதலை செய்வதை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் மாநில ஆளுநரின் மனப்பான்மையை இம்மாநாடு கண்டிக்கிறது . .உடனடியாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
16. பசுக்குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது
அரசமைப்புச் சட்டம் தந்துள்ள தனி நபர் உரிமைகளைத் துச்சமாக மதித்து தாத்ரியில் முதியவர் அஹ்லாக் தொடங்கி பால் வியாபாரி பெஹ்லு கான் தொடர்ந்து டெல்லி தொடர் வண்டியில் பாலகன் ஜுனைத் வரை பசுக்குண்டர்களால் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்த செயல் கண்டு நாடே கொந்தளித்த போதும் பாஜகவால் ஆளப்படும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளான உ பி ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் ம பி , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பசு குண்டர்களால் அப்பாவி சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர் . கொடூரங்களும் கொலை வெறியாட்டங்களும் தொடர்கிறதே ஒழிய குற்றவாளிகள் சட்டத்தின் படி தண்டனை பெறுவார்களா என்ற நம்பிக்கையை மேற்கண்ட அரசுகள் சிதைத்து வருகின்றன. விரைவான நீதி நடவடிக்கைகளின் வாயிலாக அத்தகைய மனித குல விரோதிகளுக்கு சட்டப்பூர்வமான தண்டனைகளை வழங்கிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது
17. கருத்துரிமைக்கு விரோதமான மத்திய மாநில அரசின் நடவடிக்கைகள்
அரசமைப்பச் சட்டத்தின் விதி 19 அளித்துள்ள கருத்துரிமைக்கு விரோதமாக மோடி ஆட்சியில் ஜனநாயக செயற்பாட்டாளர்களும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள்; சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனமாகவே மக்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. பாசிச கொள்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மனித உரிமைகளை ஜனநாயக மாண்புகளை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசின் செயல்களுக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கண்ணசைவில் அடிமை சேவகம் செய்வதில் இன்பம் காணும் தமிழக அரசும் மக்களுக்காக குரல் எழுப்பும் தமிழகத்தின் திருமுருகன் காந்தி, முகிலன், வளர்மதி உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்தும் அச்சுறுத்தியும் மனித உரிமைக்கு உலை வைக்கின்ற போக்கையும் இம்மாநாடு வலிமையாகக் கண்டிக்கிறது.
18 அரபி, உருது, சிறுபான்மை மொழிகள்
தாய்மொழி வழி கல்வியே தேசப்பிதா காந்தியடிகளின் கொள்கையாகும். தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழி வழிக் கல்வி உரிமை மெல்ல மெல்ல பறிக்கப்படுவது வேதனைக்குரியது. தமிழை அவர்கள் கட்டாயப் பாடமாகப் படிக்க முன்வந்தும் கூட உருது மொழி உள்ளிட்ட சிறுபான்மை மொழியினரின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் உருது, அரபி மொழிக்கான ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. சென்னை நந்தனம் அரசுக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் அரபி மொழித் துறையே மூடப்பட்டுள்ளது. பரவலாக உருது மொழி பள்ளிக்கூடங்களும் மூடப்படுகின்றன. இந்த போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மொழிச் சிறுபான்மையினரின் கல்விக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
19. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்
:
விடுதலையின் போது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, அவசர நிலைக் காலத்தில் இசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது., தமிழகத்தின் கல்விச் சீர்குலைவுகளுக்கும், தமிழக மாணவர்களின் கல்விக் கனவுகள் சிதைவதற்கும் இதுவே முதன்மைக் காரணமாக உள்ளது. எனவே, இசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
20 நீட் தேர்வு
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு மத்திய அரசு கட்டமாயமாக்கிய நீட் (NEET) தேர்வு, 1200க்கு 1175 எடுத்த அரியலூர் மாணவி அனிதா உள்ளிட்டோரின் உயிரையே பறித்து விட்டது. இந்தக் கொடுமையான அநீதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டி, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு குப்பையில் வீசியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மருத்துவ இடங்களைத் தமிழரல்லாதோர் பறிப்பதற்கும், தமிழக மாணவர்களை சிதைப்பதற்கும், தமிழகத்தை ஒடுக்குவதற்கும் உதவுகிற கருவியான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்தே தீரவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
21 பாதிக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
:
சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைக்கு 40 ஏக்கர் நிலத்தை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு 1975ஆம் ஆண்டு வழங்கியது. இதற்கான கிரயத்தையும் அறக்கட்டளை அரசுக்கு செலுத்தியுள்ளது. அரசின் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக அந்நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தரப்படவில்லை. ஏழை, எளிய மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மாணவ, மாணவியர் அதிகமாகப் பயின்று வரும் சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரிக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கர் வரை வனத்துறை பறித்திருப்பதையும், அங்கிருக்கும் பள்ளிவாசலை இடிக்கப் போவதாக மிரட்டுவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மீண்டும் அந்நிலம் முழுமையும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
22. அய்யா வழி சமயம்
: கர்னாடகா மாநிலத்தில் லிங்காயத்துகளை தனி சமயமாக அறிவித்ததைப்போல தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்படும் (குறிப்பாக தென் மாவட்டங்களில்) தமிழ் வழி வழிபாட்டு முறையான அய்யா வழி வழிபாடு சமூகத்தை தமிழக அரசு தனி சமயமாக அறிவிப்பதோடு அவர்களை மதவழி சிறுபாமையினராக அறிவிக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
23. உள்ளாட்சித் தேர்தல்
ஜனநாயகத்தின் ஆணிவேறாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் நடத்தாது ஜனநாபக விரோத செயலாகும். இதன் காரணமாக மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய நிதி முழுமையாக கிடைக்க பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதிகாரிகளின் ஆளுகையில் வரிகளும் தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளன. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
24. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் தீர்ப்புகள்:
சமீப காலமாக உச்சநீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் மதஉரிமைகளில் தலையிடும் வகையில் அமைந்துள்ளன. அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 அளித்துள்ள உரிமைகளில் தலையிடும் வகையில் நாட்டின் உயர் நீதி பரிபாலன சபை தீர்ப்புகள் வழங்குவதை இம்மாநாடு கவலையுடன் பதிவுச் செய்கிறது. ஒழுக்க மாண்புகளை சீர்குலைக்கும் வகையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்’றும் இம்மாநாடு கருதுகின்றது.
வாக்குரிமைப் பாதுகாப்பு
24.வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான வாக்காளர்கள் சூழ்ச்சியான முறையில் நீக்கப்பட்டிருப்பதை CRDDP என்ற அமைப்பு வெளிக்கொண்டு வந்தது. இதில் அதிகமாக முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமானதாகும். மாநாட்டிற்கு வந்திருப்பவர்கள், வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் பரப்புவதோடு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை வைத்து தமக்கு வாக்குரிமை இருப்பதாக அலட்சியமாகக் கருதிவிடக்கூடாது என்றும் வாக்காளர் பதிவு சிறப்பு முகாமில் பங்குக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. திட்டமிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களைத் திரும்பவும் பட்டியலில் சேர்த்திட தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணியாற்றிட வேண்டும் எனவும்
இம்மாநாடு கோருகிறது.
25. பெட்ரோல் டிசல் விலை உயர்வு: மத்திய அரசின் மக்களை வஞ்சிக்கும் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் கொண்டே செல்கிறது. அன்றாடம் பெட்ரோல் டிசலுக்காக மக்களிடமிருந்து கூடுதல் தொகையை பறிக்கும் மத்திய அரசு இந்த விலை உயர்வின் காரணமாக வரிகள் வாயிலாக தனது வருமானத்தை மட்டும் கனிசமாக பெருக்கிக் கொண்டுள்ளது. பெட்ரோல் டிசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியதை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் பெட்ரோல் டிசல் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வரவேண்டுமென்றும் இம்மாநாடு கோருகின்றது.