திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே இரண்டு வயது குழந்தை சுர்ஜித் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்தான்.
25.10.2019 தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் உடலை மீட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். சுர்ஜித்தின் பெற்றோருக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.
குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மற்றும் சுர்ஜித்தை மீட்க தோண்டப்பட்டட இடத்தையும் உடனடினயாக காண்கிரீட் கலவைபோட்டு முறைப்படி மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையும் தாண்டி பிற மாநிலங்களிலும், உலக அளவிலும் குழந்தை சுர்ஜித்துக்காக மக்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, பாலீத்தீன் பையில் சுர்ஜித்தின் உடல் எடுத்துச் செல்லப்படுவதை பார்த்து உலகெங்கும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்ணீர் விட்டனர்.