சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் சிதம்பரம் - கடலூர் புறவழிச்சாலையில் ஏ.மண்டபம் கிராமத்தில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த அக்.25 ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று மெடிக்கல் கடையில் பூஜை போடுவதற்கு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது இதனை நோட்டமிட்டு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிலிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் உத்தரவின் பேரில் அண்ணாமலைநகர் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் தனிப்படை அமைத்துத் தொடர்ந்து தீவிர புலன் விசாரணை செய்த நிலையில் அதே பகுதியைச் சார்ந்த தினேஷ்(36), சண்முகம்(45), ரமேஷ் ஆகியோர் நகைகளைத் திருடியது கண்டறியப்பட்டது. பின்னர், தினேஷ் மற்றும் சண்முகம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் நகைகளைத் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் திருடிய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் ரமேஷ் மட்டும் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.