Skip to main content

தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணியில் போலீசார் அத்து மீறித் தாக்குதல்! வீடியோ

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

தூத்துக்குடியில் செவ்வாய் அன்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் அமைதியாக சென்ற தொண்டர்களைப் போலீசார் அத்து மீறித் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். பேரணியின்போது, தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், போலீஸார் நடத்திய தடியடியில் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை தொண்டர்கள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

பேரணியில் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்களும் வரிசையாக சென்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அண்ணாநகர் சாலையில் டூவிபுரம் 5 ஆவது தெரு விலக்கு அருகே சென்றபோது, போலீஸாருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீஸார் கட்சி தொண்டர்களையும், அங்கு கூடி இருந்தவர்களையும் நோக்கி தடியடி நடத்தினர்.

இதில், திருப்பூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (4), மதுரையைச் சேர்ந்த சோலைக்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதவிர, 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்