தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிடக்கோரி, தேவேந்திர சமுதாய மக்கள் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சவலாப்பேரியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் மற்றும் ராஜு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோரை முற்றுகையிட்டுள்ளனர் தேவேந்திர குல மக்கள்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்கான வாக்காளர் சர்பார்த்தல் மற்றும் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டு சவலாப்பேரி வழியாக திரும்பினர்.
அப்போது காசிலிங்கபுரம், உழக்குடி, ஆலந்தா, புளியம்பட்டி, ஒட்டுடன் பட்டி, மருதன்வாழ்வு, அக்காநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமத்தார்கள் இணைந்து அமைச்சர்களை வழி மறித்து, "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை அனுபவித்தாலும், வெளியே நாங்கள் வன்னியர், தேவர், நாடார் என்று கௌரவமாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தேவேந்திரர்களுக்கு பல்வேறு வரலாறுகள் உண்டு, ஏரும், போரும் எங்கள் குழத் தொழில் என்ற வரலாறு கொண்டவர்கள் நாங்கள். எங்களை தேவேந்திரகுல வேளாளராக அறிவித்து அரசாணை வெளியிடாவிட்டால் வரும் தேர்தலில் நீங்கள் எந்த கிராமத்திலும் நுழைய முடியாது." என மிரட்டலாக கூறவும் வேறு வழியில்லாமல் "கண்டிப்பாக செய்கிறோம்" என கோரஸாக குரல் எழுப்பிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர் அமைச்சர் பெருமக்கள். இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.