தமிழகத்தில் 2.0 என்ற காவல்துறை நடவடிக்கையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் முதல் முறையாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சொத்து சம்பாதித்தவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள், வாகனங்கள் அனைத்தையும் போலீசார் முடக்கி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே கடந்த டிசம்பர் மாதம் சாலைப்புதூர் பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனையிட்டதில் ஒரு வீட்டில் மூடை மூடையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுமார் 210 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நவீன்குமார், சேதுபதி, நாட்ராயன், பூசாரி முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் தொடரப்பட்டது. இந்நிலையில், மாநில காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சம்பாதித்த 4 பேரின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், பண பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில், உசிலம்பட்டி, நெல்லூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் பங்களாக்கள் கட்டி இருப்பதும், வங்கிக் கணக்குகள் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனையில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 2.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வங்கிபணப் பரிவர்த்தனைகள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களை தற்காலிகமாக முடக்குவதற்கான பரிந்துரைகளை அந்தந்தத் துறைக்கு பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் அனுப்பி வைத்தார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு அதில் சம்பாதித்த சொத்துக்களை உள்ளூர் போலீஸார் முடக்கியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஏ.டி.எஸ்.பி. லாவண்யா மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், பாராட்டி அவர்களுக்கு ரிவார்டும் வழங்கினார். இப்படி கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை போலீசார் முதன் முதலில் முடங்கியது கண்டு கஞ்சா வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.